எமது பண்டிகைகளும் பாரம்பரியங்களும்

 மக்களின் பண்பாட்டை வளர்க்கும் சாதனங்களுள் விழாக்கள், விளையாடடுக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்துக்கள் கொண்டாடும் சிறப்பான விழாக்கள் பல.

தைப்பூசம்
     27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பௌர்ணமி) இருக்கும்.
  தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.


விஜயதசமி

    நவராத்திரி 9 இரவுகளைத் தொடர்ந்து   பத்தாம் நாள் வருவதே விஜயதசமியாகும். எருமை வடிவம் கொண்ட மகிஷனோடு ஒன்பது இரவுகள் யுத்தம் செய்து கொற்றவையாக அவன் தலையை கொய்து விஜயையாக அம்பிகை நின்ற நாள் விஜயதசமி.
vijayathasamiமுந்தைய நாள் அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் பூஜித்து நைவேத்தியம், தீபாராதனை எல்லாம் ஆனபின் பக்தியோடு சிலவரிகளாவது படித்தால் கல்வி அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.
அம்பு போடுவது ஏன்?
    விஜயதசமி தினத்தன்று சிவன்கோவில்களில் பரிவேட்டை உற்சவம்னு ஒன்று நடைபெறுகிறது. இறைவன் எழுந்தருளி வன்னிமரத்தில் அம்பு போடுவது வழக்கம். இதோட கருத்து என்னன்னா, வன்னி மரம் மனித உடலாகக் கருதப்படுகிறது. இந்த மரத்தில் இறைவன் அம்பு போடுவது நமக்கு ஞான உபதேசம் செய்வதைக் குறிக்கும்.

     அம்புகள் தான் ஞானம்! இந்த பத்தாம் நாளில் சண்டி ஹோமத்தில் கலந்து கொள்வது சிறப்பானது. மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்த வடிவமே சண்டி. இவளை வழிபட்டால் முப்பெரும் தேவியரையும் வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.
ஆயுத பூஜை
    ஆயுதம் என்பதன்  உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது எனலாம்.உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.
   ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகைத் தொழில் உபகரணங்களையும் கழுவிச் சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்துத் தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். அவ்வகையில்  ஜூலை மாதம் - தமிழ் முறைப்படி ஆடி முதலாம் திகதி ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும்.

தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. இந் நாளில்  தமிழ் மக்கள் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணுதலும் வழக்கமாகும்.

ஆடிப்பிறப்பைப்பற்றி எமது நாட்டு தங்கத்தாத்தா என அழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் பாடிய பாடல்-

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!



தைப்பொங்கல்
உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பர். உழைக்கும் தமிழ் மக்கள்  தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுவர்.
                   
                   பட்டிப்பொங்கல்
  உழவுத் தொழிலில் உழவனுக்கு உறுதுணையாய் இருக்கும் எருதுகளுக்கு பொங்கல் இட்டு மரியாதை செய்வதே பட்டிப் பொங்கல் ஆகும். தமிர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கும் தைத்திருநாள் இரண்டாம் நாள் நிகழ்வான பட்டிப்பொங்கல் காலம் காலமாக முக்கியத்துவம்  பெறும்  கால்நடைகளுக்கான பண்டிகை ஆகும்.
      மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக பட்டிப்பொங்கல் திகழ்கின்றது. அன்று பசுக்கள் மற்றும் எருதுகளைக் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து,  அவைகளை நீராட்டி கொம்புகள் சீவிப் பளபளக்கும் வகையில் வர்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடப்படும். கழுத்துக்குத் தோலிலான வார்ப் பட்டையில் சலங்கை கட்டித் திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

  உழவுக்கருவிகள் உள்ளிட்ட விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளும் இந் நாளில் சுத்தம் செய்யப்படும்.
தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுக்கப்படும்.
உழைப்பில் உதவும் உயிரினத்தை நன்றி செலுத்தவும் பசுச் செல்வங்களை நேசிக்கும் மரியாதை செய்யும் மனித மாண்பையும் பட்டிப்பொங்கல் வெளிப்படுத்துகின்றது

தீபாவளி
  • 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
  • நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள்.
  • மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்றார். 
  • அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.
  • பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான்.
                          
  • நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.
  • நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.

நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment